தமிழகம்

பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்கள் தேவை: சென்னை சென்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்திய புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள்

செ.ஞானபிரகாஷ்

பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்கள் பெற சென்னை சென்று கட்சித் தலைமையிடம் புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், அதிமுக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 இடங்கள் வரை பெற்று வந்தது. தற்போது பாஜக புதுவையில் காலூன்ற வியூகம் வகுத்துள்ளது. இதனால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமையும்போது இரு கட்சிகளும் கூடுதலாக இடங்களை எதிர்பார்க்கின்றன. இதனால் அதிமுகவுக்குக் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் கூடுதல் இடங்களைக் கூட்டணியில் பெற விரும்பி அதிமுக செயலாளர்கள் அன்பழகன் எம்எல்ஏ, ஓம்சக்தி சேகர், தேர்தல் பிரிவுச் செயலாளர்கள் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் இன்று சென்னை சென்றனர். தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பொறுப்பாளர்கள் எம்.சி.சம்பத், செம்மலை ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

இதுபற்றி அதிமுக தரப்பில் விசாரித்தபோது, "கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினோம். கடந்த காலத்தில் தனித்துப் போட்டியிட்டாலும் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இம்முறை கூடுதல் இடங்கள் பெற்றால் அதிக இடங்களில் வெல்வோம். அதனால் அதிமுகவுக்கு அதிக இடங்கள் பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT