தமிழகம்

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

கடன் கொடுத்த நிறுவனம் தொடர்ந்த வழக்கால், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5-ம் தேதி வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனைக் கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்காமல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்குத் தர வேண்டிய மீதமுள்ள தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT