தமிழகம்

புதிய வாக்காளர் பட்டியல் விவரங்களை திமுகவுக்கு வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்: வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதிய வாக்காளர் பட்டியல் விவரங்களை திமுகவுக்கு வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிக எண்ணிக்கையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சேர்க்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, வாக்காளர் பட்டியலில் ஆளுங்கட்சியினர் தில்லுமுல்லு செய்திருப்பதாக தெரிகிறது.

எனவே, வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட வேண்டும். சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் வழங்கிய வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர், பெற்றோர் பெயர், வார்டு எண் ஆகியன இருக்கின்றன. ஆனால், வீட்டு கதவு எண் இல்லை. அதனால், புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் பற்றிய விவரங்களைச் சரிபார்க்க முடியவில்லை. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக வந்த ஒவ்வொரு விண்ணப்பத்தின் முழுவிவரங்களையும் எங்களுக்கு அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புதிய வாக்காளரின் வீட்டு கதவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது. மனுதாரர் தேவைப்பட்டால் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “தேர்தல் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இருப்பதால், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் வீட்டு கதவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதன் வழக்கறிஞர் சமர்ப்பித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பதிவு அதிகாரி மட்டத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை சிடி-யாக மனுதாரருக்கு வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பதிவு செய்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT