புதுக்கோட்டை முள்ளிப்பட்டியில் தேர்தல் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை முள்ளிப்பட்டியைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது. முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நாளை (மார்ச் 3) நடைபெறுகிறது.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. தேர்தல் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, ஜல்லிக்கட்டு விழாவை அமைதியாகவும், பரிசுப் பொருட்கள் வழங்காமலும், அரசியல் நிகழ்வுகள் கலக்காமலும், தேர்தல் விதியைப் பின்பற்றியும் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.