புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 29 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 1,485 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 8 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 13 பேருக்கும் என மொத்தம் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
மேலும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 669 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 39 ஆயிரத்து 763 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மருத்துவமனைகளில் 79 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 95 பேரும் என 174 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது. இது 97.88 சதவீதமாகும்.
இதுவரை, 6 லட்சத்து 31 ஆயிரத்து 520 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5 லட்சத்து 87 ஆயிரத்து 139 பேருக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் கடந்த 29 நாட்களில் 9,668 சுகாதாரப் பணியாளர்களும், 17 நாட்களில் 1033 முன்களப் பணியாளர்களும், ஒரு நாளில் 36 பொதுமக்களும் என, 10 ஆயிரத்து 737 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.