தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 5-ம் தேதிவரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தற்போது வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று நின்றுவிட்டது. இதன் காரணமாக உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு, வழக்கத்தைவிட 5 டிகிரி) பாரன்ஹீட் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில், கடல் மட்டத்தில் நிலவும் எதிர் காற்று சுழற்சியால் கடலோர பகுதிகளில் கிழக்கு திசையிலிருந்து குறைந்த வேகத்துடன் கூடிய ஈரக்காற்று வீசுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மார்ச் 1-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 100 டிகிரி, கரூர் பரமத்தியில் 99 டிகிரி, மதுரையில் 98 டிகிரி, நாமக்கல்லில் 97 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.