சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, தாமாகமுன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, ‘‘மதுரவாயல் - வாலாஜா இடையிலான சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம்மட்டுமே வசூலிக்க வேண்டும்’’ என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி எம்.சத்தியநாராயணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், ‘நெடுஞ்சாலை பணிகளை முழுமையாக முடிக்காவிட்டால் 75 சதவீதகட்டணம் வசூலிக்கலாம் என ஏற்கெனவே சுற்றறிக்கை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ‘‘மத்தியநெடுஞ்சாலைத் துறை அமைச்சர்இந்த சாலையில் பயணித்துள்ளாரா?’’ என்று கேட்டனர்.
மேலும், ‘‘மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலரை இந்த சாலையில் வேலூர் பொற்கோவிலுக்கு பயணித்து அறிக்கைதாக்கல் செய்ய சொல்லுங்கள்’’ என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.