தமிழகம்

24 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகலை அளிக்க ரூ.1.20 கோடி செலவாகும் என்பதால் ‘பென் டிரைவ்’-ல் நகலை அளிக்க அனுமதிக்க வேண்டும்: நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் போலீஸார் மனு

செய்திப்பிரிவு

‘ஃபைன் ஃபியூச்சர்’ நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை அளிக்க ரூ.1.20 கோடி செலவாகும் என்பதால் பென் டிரைவில் நகலை அளிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை பீளமேட்டை தலைமையிடமாகக்கொண்டு ‘ஃபைன் ஃபியூச்சர்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டுவந்தது. முதலீட்டுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில், சில மாதங்களில் அந்த நிறுவனம் மூடப்பட்டது.

இதையடுத்து, முதலீடு செய்த பலர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் 2010-ம் ஆண்டு புகார் அளித்தனர். விசாரணையில், ரூ.189.15 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவனத்தை நடத்திய செந்தில், விவேக், நித்யானந்தன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், மேலும் 43 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இறுதி குற்றப்பத்திரிகை நகலை குற்றம்சாட்டப்பட்ட 48 பேருக்கும் வழங்க அதிக செலவாகும் என்பதால் சி.டி. அல்லது பென்டிரைவில் நகலை அளிக்க அனுமதிக்கக் கோரி போலீஸார் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாணிக்கராஜ் டான்பிட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ஒருவருக்கு தலா 5 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை அளிக்க வேண்டியுள்ளது. ஒரு நகல் எடுக்க ரூ.2.50 லட்சம் செலவு செய்ய வேண்டும்.

இதற்கு மட்டுமே மொத்தம் ரூ.1.20 கோடி செலவாகும். பொருளாதார குற்றப்பிரிவில் இதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே, குற்றப்பத்திரிகை நகலை சி.டி. அல்லது பென்டிரைவில் அளிக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவணங்களை பார்வையிட வேண்டுமெனில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பார்வையிடலாம்” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எதிர்தரப்பினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT