சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கோவை மாநகர காவல் துறையினருடன், துணை ராணுவத்தினரும் இணைந்து கோவையில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எஃப்.) கோவைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து மாநகர ஆயுதப்படை போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு கோவை ரத்தினபுரியில் நடைபெற்றது.
பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்கவும், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் இருந்து தயிர் இட்டேரியில் உள்ள புதுப்பாலம் வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கும், ரத்தினபுரி ஆறுமுனை சந்திப்புப் பகுதியில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை தொடக்கத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் வரை 2 கிலோமீட்டர் தொலைவுக்கும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த அணிவகுப்புக்கு மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தலைமை வகித்தார். சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மற்றும் 60 துணை ராணுவப் படை வீரர்கள், மாநகர ஆயுதப்படைக் காவலர்கள், உள்ளூர் போலீஸார் என 170-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோவை மாநகரில் தினமும் ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இரு இடங்களில் இதுபோன்ற கொடி அணிவகுப்பு நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.