திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழநி - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை மற்றும் சில்வர் தட்டு உள்ளிட்ட பொருட்கள் பண்டல், பண்டலாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, திமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் வர தாமதமானதால், வளாகத்தில் திமுகவினர் அமர்ந்தனர். மேலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறி, கல்லூரி முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் இருந்த பொருட்களை மட்டும் பறிமுதல் செய்தனர்.
கல்லூரியின் வகுப்பறையில் இருந்த பண்டல், பண்டலாக இருந்த பொருட்களை கைப்பற்ற கூறி, திமுகவினர் வளாகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, அறையில் இருந்த பொருட்களை கைப்பற்றி போலீஸார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.