தமிழகம்

ஸ்டான்லியில் மாற்று அறுவை சிகிச்சை: மகனுக்கு சிறுநீரகம் வழங்கி மறுவாழ்வு கொடுத்த தாய்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று சற்று தணிந்து வருவதால், அங்கு மீண்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. முதல் சிகிச்சையாக, மகனுக்கு தாய் சிறுநீரகம் வழங்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் அமலு. இவரது மகன் விஜய் (30). சிறுநீரகம் செயலிழந்ததால் டயாலிசிஸ் செய்துவந்துள்ளார். இந்த நிலையில், மகனுக்காக தாய் அமலு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார்.

மருத்துவமனை டீன் பு.பாலாஜி ஆலோசனைப்படி, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெவிஎஸ் பிரகாஷ் தலைமையில் சிறுநீரகவியல் துறைத் தலைவர் எட்வின் பெர்னாண்டோ, மயக்கவியல் துறைத் தலைவர் மீனாட்சி, மருத்துவர் சத்தியன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, தாயிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை மகனுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக டீன் பு.பாலாஜி, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது:

ஸ்டான்லி மருத்துவமனையில் 1986-ம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கரோனா தொற்றால் நிறுத்தப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இனிமேல் வாரம் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம். காத்திருப்போர் பட்டியலில் உள்ள 19 பேருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT