சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூதாட்டி ஒருவருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. சுகாதாரச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

செய்திப்பிரிவு

மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 529 அரசு மருத்துவமனைகளிலும், 761 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 8 அரசு மருத்துவமனைகளிலும், 65 தனியார் மருத்துவமனைகளிலும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டிருந்த கோவின் 2.0 செயலியில் (COWIN 2.0 APP) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வயது சான்றுக்காக ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என ஏதாவது ஓர் அடையாள அட்டையும் மற்றும் 45 வயது முதல் 59 வரையுள்ள இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதலாக பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்தும் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு என்ன தடுப்பூசி போடப்பட்டது என்ற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் நிறைவடைந்ததும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அவர்களின் செல்போன் எண்ணுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி வரும்” என்றார்.

SCROLL FOR NEXT