விழுப்புரம் மாவட்டத்தில் வாக் காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக் கும் வகையில் 21 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல்நடக்கிறது. இதற்கான அறிவிப்பினை கடந்த மாதம் 26-ம்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணித்திடும் வகையிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலூர் என 7 சட்டமன்றத்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் வீதம் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பறக்கும் படையிலும், ஒரு அலுவலர், சிறப்பு எஸ்ஐ, இரண்டு போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விழுப்புரம் நகரத்திற்கு வரும் வாகனங்களை, எல்லீஸ்சத்திரம் சாலையில் பறக்கும் படை அலுவலர் அறிவொளி தலைமையிலான போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் இந்த வாகன சோதனை நடைபெற்று வருகிறது.