தமிழகத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாததே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையிலுள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நாட்டு மாடுகளை பாதுகாப்பது அவசியமாக உள்ளது. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு விளையாட்டு உறுதியாக நடைபெறும். அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிடும்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியில் இருந்து பாஜக ஏராளமான படிப்பினைகளைக் கற்றுக்கொண்டது. அதேபோல், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து தவறானது. மாறாக, கேரளாவில் பாஜகவின் வாக்கு வங்கி சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசு இதுவரை எந்த ஒரு உதவியையும் மத்திய அரசிடம் கேட்கவில்லை. 1967-ல் இருந்து தமிழகத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்த, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகள் முறையாக இல்லாததே வெள்ள பாதிப்புகளுக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.