புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று மாலை முதன்முறையாக சட்டப்பேரவைகேபினட் அறையில் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் மக்களுக்கான பணிகள் என்னென்ன நடந்துள்ளது என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம், தமிழகத்திலிருந்து தேவையான தண்ணீர் பெறுவது, மணலை தமிழக எல்லையிலிருந்து புதுச்சேரிக்கு கொண்டு வருவது, வெளிநாட்டு மணல் எடுத்து வருவது, காசநோய், தொழுநோய் பாதிப்புள்ளோர் முழு சிகிச்சை, பொது விநியோகத்தில் நேரடி பணப் பரிமாற்றத்தில் பலன் சரியாக கிடைக்கிறதா என்ற விவரங்களை கலந்து ஆலோசித்தோம்.
பொருளாதார நடைமுறை களை ஆராய்ந்தோம். குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்பகுதி மாநிலக் கூட்டம் வரும் 4-ம் தேதி திருப்பதியில் நடைபெறுவதாக இருந்தது.
தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத் துக்காக புதுச்சேரிக்கு தேவையானதை தீவிரமாக ஆராய்ந் துள்ளோம்.
கூட்டம் தள்ளி வைக்கப் பட்டாலும், அதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவோம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு தேவையானதை மத்திய அரசிடம் இருந்து பெறுவோம். சாலைவசதி மேம்பாடு செய்ய தொடங்கியுள்ளோம். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தோம்.
ஏற்கெனவே எடுக்கப்பட்ட விதிமுறைகள் தொடரும். ஒரு சதவீதம் சட்ட விதிமீறலோ, தேர்தல் விதிமீறலோ இருக்காது. மக்கள் நலத்திட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் ஆகியவற்றை சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்துவோம்.
ரேஷன் பொருட்களுக்கு பதிலாக நேரடி பணம் பரிமாற்ற முறையில் குறைகள் இருந்தால் அதை சரி செய்வேன்.
அதில் நிலுவைத்தொகை விவரம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. விசாரித்து சொல்கிறேன் என்று குறிப்பிட்டார்.