சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். .
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதிநடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
இவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோவாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வாகனம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளும். அப்போது திரைப்படக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடித்துள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள், பாடல் காட்சிகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துநிலையங்கள், கல்லூரி வளாகங்கள் போன்ற இடங்களில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.