தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கட்சியினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சிவன் அருள் பேசும்போது, "தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில், எந்த ஒரு கட்சியினரும், வேட்பாளரும் சாதி,மதம், மொழி ஆகிய வேறுபாடு களை தூண்டும் வகையில் வாக்காளரிடம் வேண்டுகோள் விடுக்கக்கூடாது. வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம், சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.
பொதுவாக பள்ளி, கல்லூரிவளாகங்களில் தேர்தல் பொதுக் கூட்டம் நடத்த அனுமதியில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கினால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தலாம். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.
அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது பிற கட்சியினர் இடையூறு செய்யக் கூடாது. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை மாவட்ட காவல் துறையினரிடம் தெரிவித்து முறையான அனுமதி பெற வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது.தனியார் கட்டிட சுவர்களில் அனுமதியில்லா மல் தேர்தல் பிரச்சாரம் விளம்பரம்செய்யக்கூடாது.
வாக்குப்பதிவு நாளில் வேட்பாளர் 3 வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடையாள அட்டைகள் இல்லாமல் வாக்குச்சாவடிக்குள் யாரும் நுழையக்கூடாது.
வாக்கு சேகரிக்கும்போது 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது. வாகனங்களில் செல்லும்போதும், 5 வாகனங்களுக்கு மேல் செல்லக் கூடாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், டிஆர்ஓ தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.