தமிழகம்

நேரம் கிடைத்திருந்தால் முதல்வர் மளிகைக் கடன், நண்பர்கள் கைமாற்றுக் கடனைக் கூட ரத்து செய்திருப்பார்: ப.சிதம்பரம் கிண்டல்

இ.ஜெகநாதன்

‘‘முதல்வர் பழனிசாமிக்கு கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் மளிகைக் கடன், நண்பர்கள் கைமாற்றுக் கடனை கூட ரத்து செய்திருப்பார்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்பாச்சேத்தி காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி 5 மணிக்கு தேர்தல் அறிவிப்பு வருகிறது என்று தெரிந்தவுடனேயே அவசர, அவசரமாக பேனா, பென்சிலில் எழுதி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துவிட்டார்.

கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் மளிகைக் கடன், நண்பர்களிடம் வாங்கிய கைமாற்றுக் கடனைக் கூட ரத்து என்று அறிவித்து இருப்பார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் ரத்து அறிவிப்பில் எத்தனை மகளிர் சுய உதவி குழுக்கள், எத்தனை ஆயிரம் கோடி கடன், வட்டி எவ்வளவு என்று எதுவுமே இல்லை.

கடனை ரத்து செய்வது குறித்து வங்கியிடம் கேட்டார்களா என்று கூட தெரியவில்லை. ஐந்து நாட்களுக்கு முன்பே பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டனர். கணக்கு எல்லாம் முடித்தபிறகு, பணம் ஒதுக்காமல் கடன் தள்ளுபடியை அறிவிக்கின்றனர். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வெற்றுப் பேச்சு.

பாஜக தமிழகத்தில் ஓரிடத்தில் கூட வெல்லக் கூடாது. அப்படி வென்றால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும் பாஜக என்ற விஷச் செடி வேகமாக பரவிவிடும். அதனால் நம் மிகந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தமிழக முதல்வர் நான்கே முக்கால் ஆண்டுகள் கும்பகர்ணன் மாதிரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு, கடைசியாக 3 மாதங்களாக சுற்றி, சுற்றி வந்தார். மேலும் அடிக்கல் நாட்டுகிறேன், கடனை அடைக்கிறேன் என்று தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதெல்லாம் தேர்தலுக்கான வெற்று அறிவிப்பு தான், என்று பேசினார்.

SCROLL FOR NEXT