சென்னை மாநகரத்தில் மழை நிவாரணப் பணிகளில் 21 ஆயிரத்து 500 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
சென்னை மாநகரப் பகுதியில் கனமழை காரணமாக 398 இடங் களில் நீர் தேங்கியது. மாநகராட்சி நடவடிக்கையால் 265 இடங்களில் மழைநீர் வடிந்துவிட்டது. 133 இடங்களில் மழைநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணியில் 350 டீசல் பம்பு செட்டுகள், 47 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 21 கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளில் 21 ஆயிரத்து 500 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டது. சிறு சாலைகளில் 198.5 சதுர மீட்டர் பரப்பளவுக்கு சிறு பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு 68 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் 8,500 ரொட்டி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் 72 இடங்களில் மருத்துவ முகாம்களும், 34 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 13 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துகொண்டு, காய்ச்சல் உள்ளவர்கள் சிகிச்சைப் பெற்று சென்றுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட அடையாறு கஸ்தூரி பாய் நகர், வேளச்சேரி டான்சி நகர், ஆலந்தூர் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை, பெருங்குடி ராம்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னையா, மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
குடிநீர் வாரியம் தகவல்
சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 43 அதிவிரைவு உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.