நடப்பாண்டில் 14 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:
இஸ்ரோவின் வரலாற்றில் முதல் முறையாக பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனுடன் இன்ஸ்பேஸ் அமைப்பு மூலம் 3 உயர்கல்வி நிறுவனங்கள் வடிவமைத்த 4 செயற்கைக் கோள்களும் தற்போது ஏவப்பட்டுள்ளன. இந்த வெற்றியானது பிற கல்வி நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வழிவகை செய்யும்.
இந்த ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். இதையடுத்து நடப்பாண்டு 14 விண்வெளி ஆய்வு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதில் 7 ராக்கெட் ஏவுதல், 6 செயற்கைக்கோள் திட்டங்கள் அடங்கும். மேலும், இந்தாண்டு இறுதியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை ஓட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேசில் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் மார்க்கோஸ் சீசர் பான்டிஸ் பேசும்போது, ‘‘அமேசானியா-1 திட்டம் பிரேசில் விண்வெளி ஆய்வில் மிக முக்கியமானது. இந்த வெற்றி எங்களுக்கு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது.
மேலும், இது இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு அடையாளமாக விளங்குகிறது. இருநாடுகளிலும் இத்தகைய ஆய்வுகள் வரும் காலத்தில் அதிகரிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.