திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருப்பராயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகேசன் (29). இவரது நண்பர் பழங்கரைவேலூர் பகுதியையைச் சேர்ந்த பனியன் தொழிலாளி மகேந்திரன் (31). இவர்களது நண்பர் நரிக்குறவரான சந்துரு (29). இவர்கள் 3 பேரும் அடிக்கடி இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்வது வழக்கம்.அந்த வகையில், நேற்று முன்தினம் இரவுசந்துரு வைத்துள்ள ஏர் கன் ரக துப்பாக்கியுடன் புதிய திருப்பூர் அருகே காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். வேட்டையில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து முருகேசன் பலத்த காயமடைந்தார்.
சம்பவம் நிகழ்ந்தவுடன் பயத்தில் தனதுதுப்பாக்கியுடன் சந்துரு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். பிறகு மகேந்திரன் தனது நண்பர் ஒருவரை வரவழைத்து முருகேசனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகேந்திரனை பிடித்து பெருமாநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏர் கன் ரக துப்பாக்கிக்கு உரிமம் வாங்க வேண்டியதில்லை என தெரிகிறது. இருப்பினும், துப்பாக்கியிலிருந்து முருகேசன் மீது பாய்ந்த குண்டு தவறுதலாக வெடித்ததில் வந்ததா அல்லது உள்நோக்கில் சுடப்பட்டதால் வந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.3 பேரும் முயல் வேட்டைக்கு சென்றதாக கூறுகின்றனர். அப்பகுதியில் மான்கள் அதிகளவில் வசிப்பதால், மான்களை வேட்டையாட சென்றனரா என்பதையும் பார்த்து வருகிறோம். துப்பாக்கியுடன் ஓடிய சந்துருவை தேடி வருகிறோம், 'என்றனர்.