பிரதமர் நரேந்திரமோடிக்கு திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசியல் அமைப்புச் சட்டம் 22 மொழிகளை தேசிய மொழிகளாக 8-வது அட்டவணையில் பட்டியலிட்டுள்ளது. அவற்றை தாய் மொழியாக கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தங்கள் தாய்மொழி யிலேயே கருத்துகளை முன்வைக்கவும், அதன் மீது விவாதம் செய்யவும், அந்த நடவடிக்கைகள் 22 தேசிய மொழிகளிலும் ஏக காலத்தில்மொழி பெயர்க்கவும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும், தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது, நாடாளுமன்றத்தில் எனது கருத்துகளை முன்வைத்தேன். இதனால் தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும் வலுப்படுவதோடு, தங்கு தடையில்லாமல் தங்கள் தாய்மொழியிலேயே கருத்துகளை வெளியிடுகிற, விவாதிக்கின்ற ஜனநாயகத் தன்மையும் விரிவடையும், செழுமையுறும்.
இதுதொடர்பாக தாங்கள் துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஆக்கப்பூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்து முழுவதும் உறுப்பினர்களின் தாய்மொழி வழியில் அமைய வேண்டும். அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடிதப் போக்குவரத்துகளை தாய்மொழி மூலமாக செய்வதற்கான விரிவானநிர்வாக ஏற்பாடுகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும். இதன்மூலமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கு தடையில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய, மக்களுக்கான கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.