விக்கிரவாண்டி அருகே திருநந்திபு ரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி குமுதா. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டிக்கு நேற்று சென்றார். ஆட்டுப்பட்டியில் 3 நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து கொண்டிருந்தன. நாய்களை வெளியே விரட்டி உள்ளே சென்று பார்த்தார். அப்போது 8 குட்டிகள் உள்பட 28 ஆடுகள் காயத்துடன் இறந்து கிடந்தன. 3 ஆடுகள் காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.
இதுகுறித்து எண்ணாயிரம் கால்நடை மருத்துவர் பொற்செழியனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் சம்பவ இடத்திற்குசென்று காயத்துடன் கிடந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இதுகுறித்து விழுப்புரம் மண்டல கால் நடை துறை இயக்குநர் அலுவலகம் மற்றும் ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.