புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸூக்கு முழு ஆதரவு அளித்து ஏனாம் தொகுதி வேட்பாளராக ரங்கசாமியை தேர்வுசெய்துள்ளதாக முன்னாள் அமைச் சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரி வித்துள்ளார்.
புதுச்சேரி ஏனாம் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்ந் தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிருஷ்ணாராவ். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஏனாம் வளர்ச்சித் திட்டங்களை தடுத்து வருவதாக குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி 15-ம் தேதி எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய் தார். முன்னதாகவே அவர்,“வருகிற சட்டப்பேரவை தேர்தலில் ஏனாம் தொகுதியில் நான் போட்டி யிடமாட்டேன். அதேபோல், என்னு டைய குடும்பத்தில் இருந்தும் யாரும் போட்டியிட மாட்டார்கள்” என உறுதியாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமில் அனைத்துசமுதாய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். இதில், வருகிறசட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸூக்கு ஆதரவு அளிப்பது டன் ஏனாம் தொகுதி வேட்பாளராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:
ஏனாம் தொகுதியில் ரங்கசா மியை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். இதன்மூலம் எதிர்காலத்தில் ஏனாம் வளர்ச்சி பெறும். கிரண்பேடி தடுத்த நிறுத்தி திட்டங்களை செயல்படுத்த முடியும்.
எனவே, என்ஆர் காங்கிரஸூக்கு ஆதரவளித்து அக்கட்சியில் சேர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பைசா தேவையில்லை. ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்துக்கு ஒருமுறை வந்தால்போதும். அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து சட்டசபைக்கு அனுப்பு வோம்.
20 ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் முதல்வர் சண்முகம் போட்டியிடுவதற்காக ஏனாம் தொகுதியை ராஜினாமா செய் துள்ளேன்.
எதிர்காலத்தில் ஏனாமுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்காக எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. எதிர்காலத்தில் ராஜ்யசபா சீட் கூட தேவையில்லை என்று கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமிநாராயணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வரும் 3-ம் தேதி என்ஆர் காங்கிரஸில் சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.