தமிழகம்

சேமிப்பை ஊக்குவிக்க பள்ளிகள்தோறும் சிறப்பு முகாம்: அஞ்சல்துறை முடிவு

செய்திப்பிரிவு

மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பள்ளிகள் தோறும் சிறப்பு முகாம்களை நடத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

சர்வதேச சேமிப்பு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு சர்வதேச சேமிப்பு தினத்தையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு விடுத்த செய்தியில், “சிறுக கட்டி பெருக வாழ்க” என்பதற்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பு முகாம்களை நடத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறும்போது, “உலக சேமிப்பு தினம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. சேமிப்பு திட்டத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் தொடர் சேமிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். எனவே, பள்ளி மாணவர்களை அஞ்சலக சேமிப்பு கணக்குகளை தொடங்க வைக்கும் முயற்சி களில் இந்த நவம்பர் மாதம் முழுக்க ஈடுபடவுள்ளோம்.

இந்த சிறப்பு முகாமின் போது 12 வயதான பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்க்க உள்ளோம். இதற்காக பள்ளிக்கல்வி துறையிடம் கடிதம் கொடுத்துள்ளோம். விரைவில் இந்தப் பணிகளை தொடங்குவோம்” என்றார்.

SCROLL FOR NEXT