கை, கால்கள் செயலிழந்து வறுமை யில் வாடிய ராணிப்பேட்டை காவலருக்கு சிகிச்சைக்கான முழு செலவையும் காவல் துறை நண்பர்கள் குழுவினர் ஏற்றுள்ளனர்.
ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய முருகன் (33). இவர், கடந்த 2011- ம் ஆண்டு காவல் துறையில் 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். முதன் முதலாக தருமபுரியில் பயிற்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து, ஆவடி சிறப்பு பட்டாலி யனில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய முருகனுக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்தன. இதனால் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். மேலும், ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரண மாக அவரது குடும்பம் வறுமை நிலைக்கு சென்றது.
ஜெயமுருகன் தனது நிலை குறித்து தன்னுடன் 2011-ம் ஆண்டு தருமபுரியில் பயிற்சி பெற்ற காவல் துறை நண்பர்களுக்கு ‘வாட்ஸ் -அப்’ மூலம் தகவல் தெரிவித்தார். மேலும், தனது கை, கால்கள் செயலிழந்தது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் அனுப்பினார். இதனை பார்த்த காவல் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, அவர்கள் ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்துக்கு வந்தனர். ஜெயமுருகனுக்கு உதவி செய்ய எண்ணிய அவருடன் காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சிபெற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து ரூ.50ஆயிரத்தை அவரிடம் வழங்கினர். மேலும், தற்போது ஆந்திர மாநிலம் பலமனேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் ஜெயமுருகனுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த சிகிச்சைக்கான செலவு முழுவதையும் காவல் துறையைச் சேர்ந்த நண்பர்கள் ஏற்றுக் கொள் வதாக தெரிவித்தனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த காவலர் ஜெயமுருகன் தன்னுடன் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு நன்றி தெரி வித்தார்.
ஜெயமுருகன் முழுமையாக குணமடைந்து, மீண்டும் காவல் பணியில் சேருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர்.