தமிழகம்

ராமநாதபுரத்தில் மீனவர்களை வலையில் விழ வைத்து வெற்றியை தீர்மானிக்கப் போகும் வேட்பாளர் யார்?

எஸ். முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் தொகுதியில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோயில், உத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் ஆகிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

ராமேசுவரம் தீவை இணைக்கும் பாம்பனில் கடலுக்குள் அமைக்கப்பட்ட ரயில் பாலம் மற்றும் இந்திராகாந்தி சாலைப் பாலம் பிரபலமானவை. அது போக பேக்கரும்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் நாடு முழுவதும் அனைவரும் தேடிவரும் இடமாகி உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் தனுஷ்கோடியும், சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த ராமலிங்க விலாசம் அரண்மனையும் வரலாற்றுச் சின்னங்களாக உள்ளன.

ராமேசுவரத்தில் இந்திய கடற்படை, மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல்படை, உச்சிப்புளியில் கடற் படை ஐஎன்எஸ் பருந்து விமானத் தளம் ராணுவ முகாம்களும் இந்தத் தொகுதியில் உள்ளன.

ராமநாதபுரம் தொகுதியில் ராம நாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகளும், மண்டபம் பேரூ ராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல் லாணி, மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தொகுதியில் முக்குலத்தோர், முஸ்லிம், கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், யாதவர் பரவலாக வசிக்கின்றனர். முக்கியத் தொழிலாக மீன்பிடிப்பும், விவசாயமும் உள்ளன. தொகுதி மக்கள் இன்றும் குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர். மேலும் ராமேசுவரம் மற்றும் கீழக்கரை நகராட்சியில் பாதாளச்சாக்கடை அமைக்கப்படாதது நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது.

1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறை, திமுக 4 முறை, அதிமுக 6 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறை, சுயேச்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

2016 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாவை அதிமுக வேட்பாளர் டாக்டர்
எம். மணிகண்டன் 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தொடர்ந்து அவருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

சில மாதங்கள் மாவட்டச் செய லாளராக இருந்த நிலையில், கட்சி நடவடிக்கைக்கு ஆளான மணி கண்டன் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தார். தொடர் சர்ச்சைகளால் 2019-ல் அமைச்சர் பதவியையும் இழந்தார்.

தற்போது அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளராக இருக்கிறார். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, ராமேசுவரத்தில் குடியரசுத் தலைவர் கலாம் பெயரில் கலை, அறிவியல் கல்லூரி. பாம்பன் குந்துகால் மீன் இறங்குதளத் துறைமுகம் ஆகி யவை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகும்.

மீண்டும் சீட் கிடைக்குமா?

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் பதவி நீக்கப்பட்ட ஒரே அமைச்சரான மணிகண்டனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே உள்ளது. இத்தொகுதியில் களமிறங்க முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவும் ஆர்வ மாக உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக, ராம நாதபுரம் தொகுதியில் பாஜக தங்களது செல்வாக்கை ஓரளவு அதிகரித்துள்ளது. இந்துக்களின் தலமான ராமேசுவரம் இடம் பெற்றுள்ள ராமநாதபுரத்தில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது. ராமசேது பாதுகாப்பு இயக்க அகில பாரதச் செயலாளரும் தமிழ் மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் டி. குப்புராமு, மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் ஆகியோர் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.

திமுகவில் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன் னாள் எம்பி பவானி ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் இங்கு போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் தனுஷ்கோடி முதல் கீழக்கரை வரையிலான 85 கி.மீ நீண்ட கடற்கரையில் சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது சார்ந்து மேலும் 50 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இம்மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இதுவரை யாராலும் நிறைவேற்றப்படவில்லை. இத்தொகுதியைப் பொருத்தவரை மீனவர்களை வலையில் விழ வைக்கும் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

SCROLL FOR NEXT