மத்திய உள்துறை அமித் ஷா தமிழகம் வந்தடைந்தார். நேற்றிரவு 12.30 மணியளவில் அவர் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அமித் ஷா கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். தமிழகம் வந்துள்ள அமித் ஷாவை முதல்வர், துணை முதல்வர் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இன்று காலை அவர், புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். புதுச்சேரியில் கூட்டணி இறுதி செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். காரைக்காலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, விழுப்புரம் வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட பிரிவின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் அமித்ஷா சிறப்புரையாற்றுகிறார்.
அமித்ஷா வருவதையொட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தையொட்டி விழுப்புரம் ஜானகிபுரத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர், கட்சிக் கொடிகள், விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
விழுப்புரத்துக்கு அமித்ஷா வருகையையொட்டி டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.