சட்டப்பேரவை தலைவராக மிக அதிக காலம் பணியாற்றும் வாய்ப்புபெற்றதை பெரும் பேறாக கருதுகிறேன் என்று பேரவைத் தலைவர்பி.தனபால் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் பி.தனபால் பேசியதாவது:
கடந்த 2016 மே 25-ம் தேதி தொடங்கி 2021 பிப்ரவரி 27-ம் தேதி வரை 15-வது சட்டப்பேரவையின் 10 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. இந்த 5 ஆண்டுகளில் பேரவை 167 நாட்கள் கூடியுள்ளது. கூட்டம் மொத்தம் 858 மணி 12 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.
5 ஆண்டுகளில் 213 உறுப்பினர்களிடம் இருந்து 1,30,572 கேள்விகள் பெறப்பட்டன. பேரவையில் மின்துறை, உள்ளாட்சி, சுகாதாரம், பள்ளிக்கல்வி, வருவாய் துறைகளின் அமைச்சர்கள் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர்.39 சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில்12-க்கு முதல்வர் பழனிசாமி பதில்அளித்தார். 210 மசோதாக்களில் 205 நிறைவேற்றப்பட்டன. அரசு தீர்மானங்கள் 7 நிறைவேறின. விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி 110 அறிக்கைகள் வாசித்தார்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனைத்து நாட்களும் பேரவைக்கு வந்து, கூட்டம் சிறப்பாக நடக்க பெரும் பங்காற்றினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சுப்பராயன், சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநில முதல்வராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் என்று 5 தலைவர்களின் படங்கள் பேரவையில் திறக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் மிக அதிக காலம் (9 ஆண்டுகள்) பேரவைத் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு பெற்றதை பெரும் பேறாககருதுகிறேன். எனது பணிக் காலத்தில் 10 ஆளுநர் உரைகள், 10 பட்ஜெட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மணிமண்டபம்
தனபால் பேசும்போது, ‘‘என்அவிநாசி தொகுதி உள்ளிட்ட கொங்கு மண்டல விவசாயிகளின் கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ரூ.1,652 கோடியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருந்ததியரின் கோரிக்கையான தீரன் சின்னமலையின் தளபதி வீரன் பொல்லானுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வரால் இது சாத்தியமானது’’ என்றார்.