மாமல்லபுரம் கடற்கரையில் மாசிமக உற்சவத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கன்னியம்மனை வழிபட்ட இருளர் மக்கள். 
தமிழகம்

மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள்: பாரம்பரிய முறையில் கன்னியம்மனை வழிபட்டு நடைபெற்ற திருமணங்கள்

செய்திப்பிரிவு

மாசிமகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வழிபட்டு, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும்குடைவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, நாள்தோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகத் திருநாளில் இருளர் இன மக்கள், கடற்கரையில் ஒன்றுகூடி 3 நாட்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டுச் செல்வர். மாசிமக நாளையொட்டி நேற்று முன்தினம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர்.

மேலும், நேற்று அதிகாலை கடற்கரையில் மணலில் 7 படிகள் கொண்ட கோயில் அமைத்து கன்னியம்மனை பாரம்பரிய முறையில் குடும்பத்துடன் வழிபட தொடங்கினர். பின்னர், தங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் மீது கன்னியம்மன் வந்து அருள்வாக்கு கூறும் என நம்பி வழிபட்டனர்.

அப்போது, குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதற்காக கன்னியம்மனிடம் அருள்வாக்கு பெற்று நிச்சயம் செய்தனர்.இவர்களுக்கு அடுத்த ஆண்டுமாசிமக நாளில் கடற்கரையில் திருமணம் நடைபெறும். கடந்த ஆண்டு இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மேற்கண்ட பாரம்பரிய வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இருளர் மக்கள் குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டிருந்ததால், கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடற்கரைக்கு வரும் இருளர் மக்களுக்கு தற்காலிக கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மாமல்லபுரம் போலீஸார் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT