மகாவீர் ஜெயந்தி தினமான வரும் 11-ம் தேதி இறைச்சி கடைகளை மூடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
வரும் நவம்பர் 11-ம் தேதி சென்னை மாநகரில் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி கவலை அளிக்கிறது. அன்றைய தினம் பதப்படுத்தபட்ட இறைச்சிகளையும் விற்கக் கூடாது என சூப்பர் மார்கெட்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமண மதம் உள்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தக் கூடாது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவுக்காக மற்றவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்.
மாநகராட்சியின் இந்த உத்தரவு உணவுச் சுதந்திரத்துக்கு எதிரானது. ஆன்-லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு இறைச்சி விற்கக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரி கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும் ஒரு குறிப்பிட்ட உணவை உண்ணக் கூடாது என தடை விதிப்பது சட்டத்துக்கு எதிரானதாகும்.
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு உணவை முன்வைத்து நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இந்தப் பின்னணியில் சென்னையில் இந்தக் கட்டுப்பாடு கவலை அளிக்கிறது. எனவே, சென்னை மாநகராட்சி உடனடியாக தனது தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.