முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குவிக் மணிமண்டபத்தில் தண்ணீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. வறட்சி மாவட்டங்களை வளமாக்கிய பொறியாளரின் மணிமண்டப பூங்கா நீரின்றி காய்ந்து கிடப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான முக்கிய ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. அணை கட்டப்படுவதற்கு முன்பு இப்பகுதியில் பெய்யும் மழைநீர் விரயமாகியது. எனவே மழை பொய்க்கும் காலங்களில் கடும் பஞ்சமும் ஏற்பட்டது. இதுபோன்ற நிலையை மாற்ற ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுவிக் இப்பகுதியில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இதற்காக ஆங்கிலேய அரசு ஒப்புதலுடன் 1895-ம் ஆண்டு கட்டுமானப் பணிகளை துவக்கினார். வனவிலங்குகள் தொந்தரவு, திடீர்மழை, கடும் பனி உள்ளிட்ட சிரமங்களுக்கு இடையே இந்த அணை உருவானது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அணையின் ஒருபகுதி அடித்துச் செல்லப்பட்டது. ஏராளமான வேலையாட்களும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மீண்டும் பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் மறுத்த நிலையில் பென்னிகுவிக் இங்கிலாந்திற்குச் சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்த அணையை கட்டி முடித்தார். இதன் மூலம் வறண்டு கிடந்த மாவட்டங்கள் வளமான விளைநிலங்களாக மாறின.
நமது நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் என்ற கோணத்திலே ஆங்கிலேயரை எதிர்மறை கோணத்தில் பார்த்து வரும் நிலையில், பென்னிக்குவிக்கை 5 மாவட்ட மக்கள் தங்கள் குலதெய்வமாகவே வழிபட்டு வருகின்றனர். வர்த்தக, வியாபார நிறுவனங்கள், அமைப்புகள் போன்வற்றிற்கு இவரது பெயரையே சூட்டி, நன்றியுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். மேலும் இவரது பிறந்தநாளான ஜனவரி 15-ம் தேதி தேனி அருகே பாலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் வைத்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இவரின் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூடலூர் அருகே லோயர்கேம்ப் எனும் இடத்தில் மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டார். சுமார் 2 ஆயிரத்து 500 சதுரடி பரப்பளவில் பென்னிகுவிக்கின் முழு வடிவ வெண்கலச் சிலையுடன் 2013 ஜனவரி 15-ம் தேதி ஜெயலலிதா இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்தார். காலை 9 முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
இம்மணிமண்டபத்தில் பென்னிக்குவிக் பயன்படுத்திய சாய்வு நாற்காலி, அணை கட்டுமானத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்புற வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி பல மாதங்களாக பயன்பாடின்றிக் கிடக்கிறது. மோட்டார் பழுது உள்ளிட்ட பிரச்னையால் தொட்டியில் நீர் இல்லாத நிலையில் உள்ளது. அருகில் உள்ள சுகாதார வளாகமும் உபயோகமின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் சுற்றுப்புறங்களில் சருகுகளும், குப்பைகளும் அதிகளவில் சேகரமாகிக் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாததால் பூங்காவில் உள்ள பல செடிகள் வாடி கருகிவிட்டன. பல செடிகள் வளர்ச்சி குன்றி உள்ளன.
ஐந்து மாவட்டங்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க பாடுபட்டவரின் மணிமண்டபம் நீரின்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அதிகளவில் வந்து செல்கின்றனர். உரிய அடிப்படை வசதி இல்லாததால் இவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே மணிமண்டபத்தை பராமரிக்க உரிய முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.