தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையில்லா மாதங்களில் வருவாய் கிடைக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தூத்துக்குடியில், வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.
பின்னர், உப்பளத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது உப்பளத் தொழிலாளர்கள் ராகுலுடன் உணர்வுபூர்வமாக கலந்துரையாடினர்.
உப்பளத் தொழிலாளர்கள் குறை கேட்க டெல்லியில் இருந்து வந்த ஒரே தலைவர் ராகுல் காந்தி தான் என தொழிலாளி ஒருவர் சிலாகித்துப் பேசினார். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
அவருக்குப் பதிலளித்த ராகுல், "உப்பு உணவு முதல் மருந்து வரை எல்லாவற்றிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் உப்பை நாம் யாரும் நினைப்பதில்லை. உணவு அருந்தும்போது நினைக்காவிட்டாலும், கரோனா தடுப்பூசி போடும்போதாவது உப்பளத் தொழிலாளர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததோடு உழைப்புக்கு சரியான கூலி பெறாதவர்களைக் காணும்போது மனது வலிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய தொழிலாளர்கள் பலர், உப்பளத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு காலி உப்பளங்களில் வீட்டு மனைகள் ஒதுக்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். உப்பளத் தொழில் வருடத்துக்கு 7 மாதம் மட்டுமே வேலை இருக்கிறது எனவே மீதமுள்ள மாதங்களில் வருவாய்க்கு உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதேபோல், டாஸ்மாக் மதுபானக் கடைகள் தூத்துக்குடியில் அதிகளவில் இருப்பதாகவும் இதனால் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை அதில் தொலைத்துவிடுவதாகவும் என பெண் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மற்றொரு பெண், நீங்கள் பிரதமராகி இடும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்கானதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாவது, பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாவதும் நடக்கிறது. உப்பளத் தொழிலாளர்கள் மட்டுமில்லை நாட்டிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.72000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் நியாய் (நியாயம்) என்ற திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதியவர் ஒருவர், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா என்ற பாடலைப் பாடி ராகுல் காந்தியே நாட்டின் அடுத்த பிரதமராக வேண்டும் என்று வாழ்த்தினார்.