சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சந்திரமோகன் வரவேற்றுப் பேசினார்.
ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் சீன ஊடுருவலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "இந்தியாவின் சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சீனா ஊடுருவியுள்ளது. முதலில் அவர்கள் டோக்லாம் பகுதியில் நுழைந்து பரிசோதனை செய்தனர். அப்போது, இந்தியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதனால் லடாக், அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவினார்கள். அப்போதும் பிரதமர், இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்றே கூறினார். ஆனால் அவர்கள் நூறு கிலோமீட்டருக்கு மேல் ஊடுருவியுள்ளனர்.
பிரதமரின் இந்தப் பேச்சு சீனாவுக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் தைரியமற்ற பிரதமர் என்ற எண்ணத்தை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
அதன்பிறகு, அதே மனநிலையுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களை எதிர்ப்பதற்கு இந்தியப் பிரதமர் துணியவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. பாஜக ஆட்சி இருக்கும் வரை சீனாவிடம் இழந்த நிலத்தை இந்தியா மீண்டும் பெற முடியாது. இது மிகவும் ஆபத்தான போக்கு.
காங்கிரஸ் அரசு இருந்தபோது சீனாவை எந்தவித தயக்கமும் இன்றி துணிச்சலுடன் எதிர்த்தது. கடந்த 2013ஆம் ஆண்டு அவர்கள் ஊடுருவிய போது நமது படை அவர்களை எதிர்த்துப் பின்வாங்கச் செய்தது. நாம் அவர்களுடைய நிலத்திற்குள் ஊடுருவவும் செய்தோம். ஆனால், இன்றைய பிரதமருக்கு அந்தத் தைரியம் இல்லை" என்றார்.