ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி தொடங்கிய புதிய கட்சியான இமமுகவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் அர்ஜுன மூர்த்தியைப் பெரிதாக அறிமுகப்படுத்தினார். இவர் எனக்குக் கிடைத்தது பெரிய விஷயம் எனத் தெரிவித்தார். தான் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அர்ஜுன மூர்த்தியை தனது மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.
ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டதால் அர்ஜுன மூர்த்தி மக்கள் மன்றத்திலிருந்து விலகினார். ஆனாலும், ரஜினியின் வழியைப் பின்பற்றுவேன் என்று அர்ஜுன மூர்த்தி பேட்டி அளித்தார். இந்நிலையில் அவர் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் (இமமுக) என்கிற கட்சியை இன்று தொடங்கினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது கட்சி முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “இன்று தனி அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு எனது நல்வாழ்த்துகள்” என ரஜினி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஜுன மூர்த்தி பதிவிட்டு, “உங்களால் அடையாளப்பட்டு, உங்கள் நட்பினால் மதிக்கப்பட்டு, இன்று உங்கள் ஆசியினால் உயர்வு பெற்றேன். என் மனப்பூர்வமான நன்றிகள் @rajinikanth” எனத் தெரிவித்துள்ளார் .
உங்களால் அடையாளப்பட்டு, உங்கள் நட்பினால் மதிக்கப்பட்டு, இன்று உங்கள் ஆசியினால் உயர்வு பெற்றேன். என் மனப்பூர்வமான நன்றிகள்