ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி இன்று புதிய கட்சியைத் தொடங்கினார். இமமுக ( இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி) என அக்கட்சிக்குப் பெயரிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கரோனா தொற்று குறைந்த நிலையில் டிசம்பர் மாதம் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு கண்டிப்பாகத் தொடங்குவேன் எனத் தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் அமைப்பின் தலைவர் அர்ஜுன மூர்த்தியையும், ஆலோசகராக தமிழருவி மணியனையும் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு 'அண்ணாத்த' ஷூட்டிங் சென்றார்.
இதையடுத்து அர்ஜுன மூர்த்தி பாஜகவிலிருந்து விலகினார். ஷூட்டிங் சென்ற ரஜினிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அனைத்தையும் அவர் ரத்து செய்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவையும் கைவிட்டார். இதையடுத்து அர்ஜுன மூர்த்தியும் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனாலும், தான் திரும்ப பாஜகவிற்குப் போகப்போவதில்லை. ரஜினி விட்டுச் சென்ற வழியில் அரசியல் கட்சி தொடங்குவேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சிக்கு இமமுக (இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி) எனப் பெயர் வைத்துள்ளார்.
இது வேற லெவல் அரசியல்,
இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல்,
உண்மையான மாற்றத்தின் அரசியல்,
தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படும் அரசியல்,
இந்தக் கட்சிக்கு சாதி, மதம் இல்லை...
ஆணவத்தால் வரும் மதமும் இல்லை...
என்று தனது கட்சி தொடக்கம் பற்றி அர்ஜுன மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.