உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின். 
தமிழகம்

அதிமுக ஆட்சியால் தமிழகத்தில் எந்தத் தரப்பினரும் நிம்மதியாக இல்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெ.ஜேம்ஸ்குமார்

குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன. இதில், திமுக, பல்வேறு பிரச்சார வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. 'ஒன்றிணைவோம் வா', 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்', 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்', மக்கள் கிராம சபைக் கூட்டம் ஆகிய தலைப்புகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 5-ம் கட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சி, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் படப்பை அருகே கரசங்கால் எனும் இடத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:

"திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அரசின் கஜானாவைத் தூர்வாரிய முதல்வர் ஏரிகளைத் தூர்வாரவில்லை. திமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளும் முறையாகப் பராமரிக்கப்பட்டு தூர்வாரப்படும். தன்னுடைய ஆட்சியில் குடிமராமத்துப் பணியைப் பெருமையாகப் பேசிக் கொள்கிறார் முதல்வர். ஆனால், குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்றுள்ளது. குடிமராமத்துப் பணியைச் செய்ய ரூ.4,000 கோடி செலவு செய்ததாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், தூர்வாராமல் கணக்கு மட்டும் எழுதிக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூர்வாரிய மண்ணை விவசாயிகளுக்குத் தராமல் தனியாருக்கு லாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பல கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால், தொழிற்சாலைகள் வரவில்லை, வேலைவாய்ப்புகளும் இல்லை. தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் எழுச்சி அதிகம் இருப்பதால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்.

அதிமுக ஆட்சி முடியும் தறுவாயில் உள்ளது, ஆட்சி முடிகிறது என்பதால் தினம் தினம் புதுப்புது திட்டங்களை அறிவித்து நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. முதல்வருக்கு தெரிந்த ஒரே விஷயம் கடன் வாங்குவது. கடன் வாங்குவதில் சாதனை புரிந்துள்ளார். பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தின் கடன் தொகை ஆறு லட்சம் கோடி. கடன் வாங்கிய பணத்தில் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. நிதி ஆதாரத்தைப் பெருக்க திட்டமிடுதல் இல்லை.

தமிழகத்தில் எந்தத் தரப்பினரும் மகிழ்ச்சியாக இல்லை. விவசாயிகளின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. நெசவளார்கள் நலிவடைந்து விட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சலுகைகளை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு இல்லை. சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டன. அந்தத் தொழில் நடத்தியவர்கள் நஷ்டமடைந்து வெளியேறிவிட்டனர்.

நடுத்தர வர்க்கத்தினர் விலைவாசி உயர்வால் நொந்துள்ளனர். தொழில் செய்பவர்களை ஜிஎஸ்டி போட்டு அழித்துவிட்டனர். பெரிய நிறுவனங்களைத் தொடங்க முன்வருபவர்கள் ஆட்சியாளர்கள் கமிஷன் கேட்பதால் பக்கத்து மாநிலத்துக்குச் சென்று விடுகின்றனர். பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க முடியவில்லை. மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கையால் ஏழைகள் படிக்க முடியாது. மொத்தத்தில் தமிழகத்தில் எந்தத் தரப்பினரும் நிம்மதியாக இல்லை. இந்த ஊழல் அணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பலம் திமுகவுக்கு உண்டு.

கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுகவைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். பாஜகவினர் பல்வேறு மாநிலங்களில் வன்முறைகளை நடத்தியுள்ளனர். உண்மை தெரியாமல் பிரதமர் இப்படிப் பேசுவது கண்டனத்திற்குரியது. குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். திமுகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை என பிரதமர் சொல்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். இது மோடிக்குத் தெரியாதா? தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு ஒருவர் கூட இல்லை என்பதே அவருக்குத் தெரியாதா? இதிலிருந்து பாஜகவின் பலம் நன்கு தெரிகிறது. மோடியும், பழனிசாமியும் சொல்வதைச் செய்யமாட்டார்கள். திமுகவோ செய்வதுதான் சொல்லும், சொல்வதைத் தான் செய்வோம்.

மு.க.ஸ்டாலின் ஆகிய நான் வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்குத் தொண்டனாகவும், மக்களுக்காகக் கவலைப்படக்கூடிய தலைவனாகவும் இருப்பேன். மக்கள் கவலையைத் தீர்ப்பதில் முதல்வராக இருப்பேன். அண்ணா, கருணாநிதி மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். விரைவில் திமுக ஆட்சி மலரும், உங்கள் கவலை யாவும் தீரும்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, செல்வம், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ. கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்

SCROLL FOR NEXT