மதுரையில் பிப்.18-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இக்கூட்டத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் தனது உடல்நலம் மிகவும் குன்றிய நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பங்கேற்றார். இவர் பங்கேற்ற கடைசி முக்கிய அரசியல் நிகழ்ச்சியும் இதுவே.
கணீர் குரலில் தா.பாண்டியன் இக்கூட்டத்தில் பேசியதாவது:
நான் நின்று பேசிய காலம்உண்டு. ஆனால், இன்று உட்கார்ந்து பேசுகிறேன். என் கால், இடுப்பிலுள்ள எலும்புகள் ஒத்துழைக்கவில்லையே தவிர, என் மண்டை ஒழுங்காகத்தான் இன்றைக்கும் இருக்கிறது. என் நாவால் சாகும் வரையும் இந்த நாட்டைத் தட்டியெழுப்புவேன்.
இங்கிருந்து 10 கிமீக்கு அப்பாலுள்ள கீழடியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர் கட்டியமைத்த வீடுகள், பழைய நாகரிகங்கள் அமைந்துள்ளன. உலகத்துக்கே பொதுமறையைத் தந்த வள்ளுவன், அந்தப் பொதுமறையை இந்த மதுரை தமிழ்ச்சங்கத்திலேதான் அரங்கேற்றினான். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இங்கே வந்துதான் அரங்கேற்றினான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கண்ணனை (சிவபெருமான்), நீ நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அஞ்சமாட்டேன் என்று சொன்ன நக்கீரன் வாழ்ந்த பூமி இது.
வரப்போகிற தேர்தலிலே நமது அணிதான் வெற்றி பெறப்போகிறது என்பதைப் பிரகடனம்செய்வதற்காக இப்போது கூடியிருக்கிறோம். நம்மைத் தோற்கடிக்கும் சக்தி எவருக்குமில்லை.
இப்போது நமக்குப் பல சோதனைகள் வந்திருக்கின்றன. ஆளுகிற ஒரு கட்சி மத்திய அரசின் சட்டவிரோதச் செயல்களால் முட்டுக்கொடுத்து நாற்காலியைத் தாங்கிப் பிடிக்கிறது. முதல்வர்பழனிசாமி, மத்திய அரசுக்கு அடிமையாவதோடு, தமிழ் மண்ணையும் அடிமையாக்க நினைக்கக் கூடாது. ஆட்சி பீடத்தில் அமராமலேயே விவசாயிகளுக்கு உச்சவரம்பு உள்ளிட்ட பல உரிமைகளைப் பெற்றுத் தந்தது இந்தசெங்கொடி கட்சிதான். வகுப்பவாதத்தை இந்த மண்ணில் முற்றாக முறியடிப்போம், கால் மிதிக்கவிடமாட்டோம் என சூளுரைப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.