தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பணம் எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு, எதை அனுமதிக்கலாம், எதைதடை செய்யலாம் என்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் பெரிய தொகை பரிமாற்றம் இருந்தால் அதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டு்ம். சந்தேகப்படும் பணப்பரிவர்த்தனையை கண்காணிக்கவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலின்போது ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் கொண்டு செல்லும்போது, அந்தபணத்தை எங்கிருந்து எடுத்தார்கள். எதற்கு கொண்டு செல்கிறார்கள் என்பதற்கான முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி, உடனடியாக தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு படைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் இரண்டு தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றார்.