திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாரிடம், உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன், 2021 - 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நேற்று சமர்ப்பித்தார்.
மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் தாக்கல் செய்து கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சிக்கு வருவாய் மற்றும் மூலதன வரவு இன வகையில் வருவாய் நிதி ரூ.551 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வகையில் வருவாய் ரூ.889 கோடியே 18 லட்சத்து 27 ஆயிரம், கல்வி நிதி வருவாய் ரூ.7 கோடியே 51 லட்சத்து 85 ஆயிரம். வருவாய், குடிநீர் வடிகால் நிதி மற்றும் கல்வி நிதியின் மொத்த வருவாய் ரூ.1447 கோடியே 73 லட்சத்து 33 ஆயிரம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் மூலதன வகையில் செலவு ரூ.547 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரம், குடிநீர் வடிகால் வகையில் செலவு ரூ.888 கோடியே 77 லட்சம் 56 ஆயிரம், கல்வி நிதி செலவு ரூ.7 கோடியே 48 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவு ரூ.1444 கோடியே 16 லட்சத்து 40 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மாநகராட்சிக்கு உபரி நிதியாக ரூ.3 கோடியே 56 லட்சத்து 93 ஆயிரம் வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.