தமிழகம்

திருவள்ளூரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: சென்னை அருகே மூவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் கல்லூரி மாணவி ஒருவர், ஆறு பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

ரோந்தில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசாரால் காப்பாற்றப்பட்ட மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு காட்டூர் அருகே மாணவி ஒருவர் அவரது உறவினருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் இருந்த சில இளைஞர்கள், மாணவியையும் அவரது உறவினரையும் வழி மறித்தனர். உறவினரை தாக்கி விரட்டிவிட்டு அந்தப் பெண்ணை கடத்திச் சென்றனர். பின்னர் ஒர் ஒதுக்குப்புறமான இடத்தில் அந்த மாணவியை பலாத்காரம் செய்தனர். அவரை அங்கேயே விட்டுச் சென்றனர்.

இந்நிலையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார், ஞாயிறு காலை 5 மணி அளவில் அரை மயக்கமாகக் கிடந்த மாணவியைக் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவிக்கு, முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்றை அமைத்த பொன்னேரி காவல்துறை, ஸ்டீபன், எட்வின், மதன் என்னும் மூன்று இளைஞர்களைக் கைது செய்திருக்கிறது.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மூவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் மாணவியின் அறிக்கை அங்கேயே பதிவு செய்யப்படும். மற்ற குற்றவாளிகளைக் கைது செய்த பின்னர் மாணவியை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT