தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற மாசி மகப் பெருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, மண்டகப்படி தீபாராதனை, வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். காலை 9 மணிக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது.
முதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 4 மாசி வீதிகளில் வலம் வந்த தேர் 9.30 மணிக்கு நிலையத்தை அடைந்தது.
பின்னர் உலகம்மன் தேர் காலை 9.50 மணிக்கு இழுக்கப்பட்டு, 10.35 மணிக்கு நிலையம் சேர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, தென்காசி உதவி ஆணையர் அருணாசலம், குற்றாலம் திருக்கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மதியம் 12.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் மண்டகப்படி தீபாராதனை, கனக பல்லக்கில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது.