கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிபந்தனைகள் தளர்வு செய்யப் பட்டதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் சுமார் ஓராண்டுக்குப் பின் நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவ நாதன்: கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் களை உடனடியாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக் கண்ணு: கூட்டுறவு கடன் தள்ளு படி விவகாரத்தில் நிறைய முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பயனடைந்தவர்கள் பட்டியலை வெளிப்படையாக ஒட்ட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைப் பெற்றுக்கொள்ள லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்)
அய்யன் வாய்க்கால் பாசன தாரர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.வீரசேகரன்: கரும்பு, வாழை, உளுந்து, எள் சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை: இயற்கை பேரிடர், பருவம் தவறிய மழை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி இழப்பீட்டு நிவாரணம், பயிர்க் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட்) மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன்: டீசல் விலை உயர் வால் விவசாயிகளால் பாசன மோட்டார்களுக்குத் தேவையான டீசலை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே இலவச மின் இணைப்பு கேட்டு விண் ணப்பித்துள்ள அனைத்து விவ சாயிகளுக்கும் உடனடியாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூத்த விவசாயி கவண்டம்பட்டி சுப்பிரமணி: காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக வெட்டப்படும் வாய்க்காலில், மழைக் காலங்களில் மட்டுமே உபரிநீரை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.
மணப்பாறை, மருங்காபுரி பகுதி மக்களுக்கு காவிரி பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.