கோப்புப்படம் 
தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 ரவுடிகள் கைது

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி வாக்குப் பதிவின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் வார்டு வாரியாக தேர்தல் அலுவலகம் திறப்பது, மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் தீவிர மடையும் நேரத்தில் கட்சி தொண்டர்களிடையே மோதல், தகராறு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

இதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை கைது செய்யும் பணிகளில் காவல் துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளன. அதன்படி, கடந்த 3 நாட்களில் 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டையைச் சேர்ந்த ரவுடி தரணி (எ) லோகேஸ்வரன் (27), வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (36), ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40), ஆம்பூர் நேதாஜி நகரைச் சேர்ந்த சிரஞ்சீவி (27), விநாயகம் (35), மாதனூர் பொன்நகரைச் சேர்ந்த செந்தில் (44), வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (26) ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய் துள்ளனர்.

மேலும் பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்யவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால் நாட்டு துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT