தமிழகம்

அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதி: ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைத்திடும் வகையில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என ‘இந்து’ என்.ராம் தெரிவித்துள்ளார்.

கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் சார்பில் உடல் எடை குறைத்தல் தொடர்பாக 2 நாள் நடைபெறும் 7-வது லேப்ரோபிட் சர்வதேச மாநாடு சென்னை வேளச்சேரியில் நேற்று தொடங்கியது. இதில் மருத்துவமனையின் தலைவர் சி.பழனிவேலு வரவேற்புரையாற்றினார். மாநாட்டைத் தொடங்கிவைத்து ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

இம்மாநாட்டில் பங்கேற்று பல்வேறு மருத்துவ கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் மருத்துவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன். சென்னை போன்ற பெருநகரங்களில் மருத்துவ வசதி கிடைக்கிறது. கோவை, வேலூர், மதுரை போன்ற இடங்களிலும் மருத்துவ வசதிகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழுமையான மருத்துவ வசதி கிடைப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. பல்வேறு மாநில அரசுகள், நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையான மருத்துவ வசதி கிடைத்திடும் வகையில் மருத்துவர்கள் பணியாற்றிட வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் பெறும் மருத்துவம் சார்ந்த கருத்துகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைத்திடும் விதமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரவீன் ராஜ் கூறும்போது, உலக அளவில், அதிக உடல் பருமன் கொண்ட மக்கள், நம் நாட்டில் அதிகரித்து வருகின்றனர். “உடல் பருமனை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.

இந்த மாநாட்டில் தைவான், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT