தமிழகம்

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு

செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை திமுக அமைத்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு இருப்பார். கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர், தி.மு.க.), இ. பெரியசாமி (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,), க.பொன்முடி (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.) சுப்புலெட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.), ஆர்.எஸ். பாரதி (தி.மு.க. அமைப்புச் செயலாளர்) எ.வ. வேலு (தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் மற்ற கட்சிகளும் தங்களின் நேரத்துக்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை திமுக அமைத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இனி தமிழக அரசியல் களத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

SCROLL FOR NEXT