தமிழகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக இல்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் குழந்தைகள் உரிமை செயற் பாட்டாளரும் ‘தோழமை’ அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்.
மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) யுனிசெஃப் அமைப்புடன் தோழமை அமைப்பு இணைந்து ஊடகவியலாளருக்கான பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
தொடக்கவுரை ஆற்றிய தேவநேயன், "குழந்தைகளுக்கான பீட் ஊடகங்களில் உருவாக்கப்பட வேண்டும். குழந்தையின் சிறந்த நலன் என்ற பார்வையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும். குழந்தைகளை அவர்களுக்கு எதிரான வன்முறையை பரபரப்புச் செய்தியாக மாற்றாமல் அவர்களின் சிறந்த நலனுக்கான செய்தியாக வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, தற்காலத்தில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் குறித்தும் இந்திய அளவில் குழந்தைத் திருமணங்கள் தொடரும் அவல நிலை குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான கிறிஸ்டி இது தொடர்பாக விரிவாகப் பேசினார்.
பின்னர், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை செய்தியாக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷண்முகசுந்தரம் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் இந்து தமிழ் இணையதளத்துக்காகப் பேசிய ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் தேவநேயன், தமிழகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக இல்லை என வேதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
குழந்தைகளின் உரிமை என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும்போது கருத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான அளவீடாகும். குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வது அரசின் கடமை.
ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் மீது பல்வேறு உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இதுவரை உடல் ரீதியான, மன ரீதியான, பாலியல் ரீதியான, சாதிய ரீதியான வன்முறைகள் மட்டுமே இருந்தன. இப்போது டிஜிட்டல் வன்முறை என்ற ஒன்றும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
இவ்வாறாக வன்முறைக்கான வடிவங்கள் அதிகரிக்கும் போது வெறும் சட்டங்கள் மட்டுமே குழந்தைகளை முழுமையாகப் பாதுகாத்துவிடாது. குழந்தை பாதுகாப்புக்கான கலாச்சாரம் உருவாக வேண்டும். அந்தக் கலாச்சாரம் வீடுகள் தொடங்கி எல்லா இடங்களிலும் பரவ வேண்டும். அந்த மாற்றத்திற்கு வித்திடுவதில் ஊடகத்தின் பங்கு மிக முக்கியமானது.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கே முன்னுரிமை, குழந்தைகள் நலனுக்கே முதலிடம் என்ற கோட்பாட்டின்படி அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குழந்தைகளுக்காகவே தனி வாக்குறுதிகளை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 3 கோடி குழந்தைகள் உள்ளனர். ஒருவேளை அவர்களுக்கு வாக்குரிமை இருந்திருந்தால் அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் எப்படி அவர்களைப் பேணியிருக்குமோ அதே அளவு கவனத்தை இப்போதே தர வேண்டும்.
தமிழகத்தில், சமூக பாதுகாப்புத் துறை இணையதளம் 4 ஆண்டுகளாகவே செயல்படவில்லை. குழந்தையை தத்தெடுக்கவோ, காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரம் அறியவோ, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் பற்றி அறிய இன்னும் பல குழந்தைகள் நலன் சேர்ந்த விஷயங்களுக்கான இணையதளத்தை 4 ஆண்டுகளாக மீட்டெடுக்காத அரசாங்கம் தான் இங்கே இருக்கிறது.
குழந்தை பாதுகாப்புக்கென ஒவ்வொரு மாவட்டத்தில் 60 முதல் 70 அதிகாரிகள் பொறுப்பில் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஒன்றிணைந்து பொறுப்புணர்வோடு செயல்படுகின்றனரா என்று என்னைக் கேட்டால் இல்லை என்றே சொல்வேன். அவர்களின் செயல்பாடு என்னவென்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
தமிழகத்தில் குழந்தை பாதுகாப்புக் கொள்கை இல்லை. வீடுகள் தான் குழந்தைகளை மூன்றாம் தரமாகப் பார்க்கிறது என்றால் அரசாங்கமும் அப்படிப் பார்க்கக் கூடாது.
குழந்தைகள் பாதுகாப்புக்கு என்றொரு தனி ஆணையரகம் அமைக்க வேண்டும். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். கேரளா, கர்நாடகாவில் குழந்தைகள், பெண்கள் நல அமைச்சகம் இருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டுமே சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழேயே இதனைக் கொண்டு வருகின்றனர். போக்சோ சட்டத்தை விரைவாக அமல்படுத்த போக்சோ தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
வளரிளம் பருவக் குழந்தைகளை பாதுகாக்க கல்விமுறை இருக்கிறதா? பள்ளிக் கூடங்களில் வாழ்க்கைத் தரம் போதிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் அரசு தான் முன்னெடுக்க வேண்டும். ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை, கட்டுரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவையெல்லாம் இல்லாத சூழலில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகவே தமிழகம் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.