கோவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி. படம்:ஜெ.மனோகரன். 
தமிழகம்

தொடர்ந்து 4-வது முறையாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி: கோவையில் 3 தொகுதிகளை எதிர்பார்க்கும் பாஜக

க.சக்திவேல்

கோவையில் தொடர்ந்து 4-வது முறையாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுவிட்ட நிலையில் கொங்கு மண்டலத்தில் 3 தொகுதிகளையாவது பெற்றுவிடுவது என பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்குள்ள இடங்களில் கோவையும் ஒன்று. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தங்கள் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள் எனவும், அதில் கொங்கு மண்டலத்தில் அதிகம் பேர் இடம்பெறுவார்கள் எனவும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தொடர்ந்து பேசிவருகிறார்.

பாஜகவைப் பொறுத்தவரையில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு உள்ள வலிமையான வாக்கு வங்கியுடன், கோவையில் தங்களுக்கு சொந்த செல்வாக்கும் இருப்பதை கூடுதல் பலமாக கருதுகின்றனர். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அதே கொடிசியா மைதானத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்காக நேற்று 4-வது முறையாக பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமரின் கோவை பயணத்தால் பாஜக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடரும் செல்வாக்கு...

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் 4,31,717 வாக்குகளைப் பெற்று வென்றார். அடுத்த இடத்தில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளை பெற்று 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார். திமுக 2,17,083 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 5,71,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளில் 8-ல் பாஜக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேட்டுப்பாளையம், வால்பாறை தவிர மற்ற தொகுதிகளில் மக்கள் நல கூட்டணி வேட்பாளர்கள் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தார். இதுதவிர, கவுண்டம்பாளையத்தில் 22,444 வாக்குகள், தொண்டாமுத்தூரில் 19,043 வாக்குகள், சிங்காநல்லூரில் 16,605 வாக்குகளை பாஜக பெற்றிருந்தது.

எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் செல்வாக்குள்ள 3 தொகுதிகளை கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT