முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரன் பரோல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது தாயார் ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமைச்சரவையின் தீர்மானத்தை தமிழக ஆளுனர் சமீபத்தில் நிராகரித்து, 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.
கரோனா காலத்தில் ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் கேட்டு மனு அனுப்பினேன். மத்திய அரசின் சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் தண்டிக்கப்பட்டு இருப்பதால் மாநில அரசால் பரோல் வழங்க முடியாது என்று கூறி என் மனு நிராகரிக்கப்பட்டது. எனவே 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரனை 2 மாதம் பரோல் விடுமுறை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளஙகோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தொடர்ந்து அவகாசம் கேட்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து, அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.