பெட்ரோல்- டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெயின் சர்வதேச விலை, அந்நியச் செலாவணி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலையைத் தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. அத்துடன் மத்திய அரசின் சுங்க வரியும் மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியும் கூடுதல் வரிகளும் இணைந்து பெட்ரோல் - டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்துச் சென்னை, வள்ளலார் நகரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்குப் பதிலளித்த அவர், ''மாநில அரசுக்கு வரி வருவாய் குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அதற்காக மக்கள் மீது திரும்பத் திரும்ப வரி போட முடியாது.
அதனால்தான் கடந்த 5 ஆண்டுகளாக வரி இல்லாத பட்ஜெட்டைக் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு (மாநில அரசு) வரி வருவாயைக் கூட்ட போதிய ஆதாரம் கிடையாது. ஆனால் மத்திய அரசுக்கு, தனது வரி வருமானத்தை உயர்த்திக்கொள்ள பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர்கள் நினைத்தால் வரி விதிப்பைக் குறைக்க நிச்சயம் வழிவகைகள் உண்டு.
அதிமுக - பாஜக கூட்டணியை நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர். வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் 2021-ல் ஆட்சி அமைக்கும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
வங்கம், ராஜஸ்தான், அஸாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள்வரிகளைக் குறைத்துக்கொண்டு பெட்ரோல் விலை உயர்வைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.